Monday, November 5, 2007

சிங்கப்பூர் மற்றும் மலேசிய பயணம்


சிங்கப்பூர் ஒரு மகத்தான நகரம், ஆறேழு முறை சென்றும் அலுக்கவில்லை என்பதுதான் நிஜம், ஒரு சக்தி வாய்ந்த காந்தம் போல என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறது என்பது உண்மை. மேலும் என் நல்ல நண்பன் ரவி அங்கு வசிப்பதால் அதிக இஷ்டம். நல்ல நண்பர்கள் பத்து பேருடன் செல்லவேண்டுமென்ற ஆசை வெகு நாட்களாக இருந்தும் நிறைவேறாமல் போய்க்கொண்டிருந்ததால் சட்டென முடிவு எடுத்து போன வாரம் போய் வந்து விட்டோம்.

மலேசியா தற்போது 50 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து, கோலாலம்பூர் ஜே ஜே என இருக்கிறது. கோபால் பல்பொடி விளம்பரம் போல சிங்கப்பூர், மலேசியா ஆகிய ஊர்களில் நமது புகழ் பரவ என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துவிட்டு வந்தோம்.

சிங்கப்பூரில் இறங்கி ரவியைச் சந்தித்து விட்டு, இரவு உணவுக்குப் பின் அடுத்த நாள் காலை கோலாலம்பூர் (KL) பயணத்திற்கு தயாராகி விட்டோம். மற்றொரு நல்ல நண்பன் ஷங்கர் அமெரிக்காவிலிருந்து இரண்டு நாள் கழித்து சிங்கப்பூர் வந்து சேருவேன் என்று சொன்னதால் அவசரப் பயணமாக KL சென்றோம்.

KL ஒரு மிகப் பெரிய நகரம். நம்ம சென்னையைப் போல எல்லா இடங்களிலும் கூட்ட நெரிசல். டாக்சி டிரைவர்களும் நம் ஊர் போலவே மீட்டருக்கு சூடு வைத்து பகல் கொள்ளை அடிக்க சித்தமாக இருக்கிறார்கள். நாங்கள் தங்கிய சீசன்ஸ் கிராண்ட் ஹோட்டல் ஒரு இன்ஜினியரிங் அற்புதம். KL நகரத்தின் மிக உயரமான ஹோட்டல் இது. கவனிக்கவும், உயரமான கட்டிடம் அல்ல. அந்தப் பெருமையை இன்னும் பெட்ரோனாஸ் டவர் மட்டுமே கொண்டாட முடியும்.

என்னதான் சொன்னாலும், சிங்கப்பூருடன் ஒப்பிடும் போது KL மிக, மிக affordable நகரம்தான்.

உலகிலேயே உயரமான கட்டிடம் பெட்ரோனாஸ் டவர்தான் என்று சிலகாலம் மலேசிய மக்கள் ஜல்லியத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப் பெருமை தைவானுக்கு. வெகு சீக்கிரம் துபாய்க்கு.

துபாயில் மிக, மிக, மிக உயரமாக ஒரு கட்டிடம் கட்ட திட்டமிட்டவுடன், கடவுள் சட்டென்று உஷாராகி துபாய் ஆசாமிகளை அணுகி "தம்பிகளா, ரொம்ப ஒசரம் வேண்டாம், நான் ரம்பை, ஊர்வசி, மேனகா மாதிரி அழகிகளோடு ஒரு மாதிரி இருக்கும் போது, உங்க ஆளுங்க பாத்துட போறாங்க," என்று request செய்து கொண்டதன் பேரில் உயரத்தை இப்போது குறைத்துக்கொண்டதாக கேள்வி.

முதல் நாள் KL நகரத்தின் பிரதான maals சிலவற்றை மட்டுமே பார்க்க முடிந்தது. பெட்ரோனாஸ் டவர் தரிசனம் வெளியில் இருந்து மட்டுமே சாத்தியமானது.
மறுநாள் காலையில் ஒரு உண்மையான super deluxe coach பிடித்து ஜென்டிங் ஹைலண்ட்ஸ் போய் சேர்ந்தோம். ஜென்டிங் ஒரு glorified VGP மற்றும் MGM வகையைச் சேர்ந்த theme park தான். அதன் ஒரே த்ரில் அங்கு போய் சேர உதவும் கேபிள் கார் சவாரிதான்.

கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் ஜென்டிங் இருப்பதால் கேபிள் கார் செங்குத்தாக ஏறுகிறது. பனிமூட்டத்தின் நடுவே எதிரே வரும் காக்காவே கண்ணுக்குத் தெரியாதபோது எப்படி இவ்வளவு உயரத்தில் இந்த கேபிள் டவர்களை நிர்மாணித்தார்கள் என்பது ஒரு பெரிய விஷயம். இறங்கி வரும்போதும் அந்த உயரம் வயிற்றில் ஏதோ செய்கிறது. ஜென்டிங் ஹைலண்ட்சுக்கு மிக அருகாமையில் மலேசியாவின் rain forests இருக்கின்றன. இந்தக் காடுகள் 32 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள். இதையெல்லாம் எப்படி கணக்கிடுகிறார்கள் என்பது மற்றொரு 32 மில்லியன் டாலர் கேள்வி!

மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் மற்ற இஸ்லாமிய நாடுகளின் கெடுபிடிகள் இல்லை. இஸ்லாமிய நாடு என்பதற்கு முக்கிய அடையாளமான மதுவிலக்கு தீவிரமாக இல்லாவிட்டாலும் மதுபானங்கள் விற்கும் கடைகளை மிக, மிக அரிதாகவே காண முடிந்தது. அதுவும் நாங்கள் போன நேரம், ரம்ஜான், ஹரிராயா ஆகிய முக்கிய விரதங்களுடன் கூடிய பண்டிகைகள் முடிந்த நேரம் என்பதால், தண்ணீருக்கு பதிலாக சர்வ சாதாரணமாக கிடைக்கும் பீர் வகைகளை மட்டும் பார்க்க முடிந்தது.

என்னுடல் வந்த என் நல்ல நண்பன் நரசிம்மன் எப்படியோ மோப்பம் பிடித்து ஒரு cold storage கடையைக் கண்டுபிடித்த பின்தான் பெருமூச்சு விட்டோம். KLCC உள்ளே ஒரு அருமையான ரெஸ்டாரன்ட் இருக்கிறது, முதல் நாள் அதில் ஒரு அமர்க்களமான லேட் லஞ்ச் சாப்பிட்டோம். பிறகு இலக்கில்லாமல் ஊர் சுற்றி விட்டு, ஹோட்டல் வரும்போது கால் வலியோ வலி. எங்கள் அதிர்ஷ்டம், மிக அருகாமையில் ஒரு தமிழ் ரெஸ்டாரன்ட், அதுவும் மதுரை ரெஸ்டாரன்ட்! விடுவோமா? பின்னிப் பெடலெடுத்து விட்டோம். சுவையும் ஓஹோ!

மறு நாள் காலையில் ஜென்டிங் சென்றுவிட்டு திரும்பும் போது, நான் "ஐ ஆன் மலேசியா" போகலாம் என்று சொன்னதன் பேரில், அங்கு சென்றோம். "ஐ ஆன் லண்டன்" மாடலில் KL சிட்டியில் ஒரு பிரமாண்டமான சக்கரத்தில் ஏற்றி மேலே போகவிட்டு நகரத்தின் இரவு அழகை ரசிக்க விடுகிறார்கள். சிங்கப்பூர் திரும்பிய போது அதே போல ஒரு ராட்சச சக்கரம் அங்கும் ரெடி ஆகிக்கொண்டிருக்க, ரவி அது ஜனவரி 2008 இல் ரெடி ஆகுமென்றும், சிங்கப்பூர் மக்கள் அதற்குள் மறை கழண்டு ஜூலை 2008 வரை புக் செய்ததாகக் கூறிய போது என்ன கொடுமை சார் இது? என்று (சென்னை 600028 பாணியில்) கேட்கத் தோன்றியது.

KL நகருக்கு வெகு அருகாமையில் ஒரு அழகான முருகன் கோவில், மலை மேல் இருக்கிறது. Batuk caves எனப்படும் இந்த குகையில், உயரத்தில், மிக அழகான முருகன் என்றும், தைப் பூசத்தின் போது KL நகரமே அல்லோலகல்லோலப் படும் என்று கேள்விப் பட்டு போகலாமா என்று நரசிம்மனிடம் கேட்க, எவ்வளவு படிகள் என்று எதிர் கேள்வி வந்தபோது 276 படிகள் என்றேன். சான்ஸே இல்லை என்று நரசிம்மன் சொன்னதால், பாவப்பட்ட இரண்டு ஜீவன்களை முருகன் ரட்சிக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது.

மறுபடியும் சந்திக்காமலா போய்விடப் போகிறேன், அதாவது, Batuk Caves முருகனை! ஒகே, மறுபடியும் சந்திப்போம்!

உங்களுடன் ஒரு நிமிடம்....

என்னதான் புரட்சிக் கவிஞன் பாரதியைத் துணைக்கு வைத்துக்கொண்டாலும் தமிழில் தொடர்ந்து நல்ல கருத்துக்களை, அனுபவங்களை, நான் படித்த புத்தகங்களை, பார்த்த படங்களை மற்றும் இந்த சூரியனுக்கு கீழே இருக்கும் எல்லா விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள சிரமங்களை நினைத்தால், சற்று தயக்கமாகவே உள்ளது.

ஏன்? சொல்கிறேன். நடிகனுக்கு கைத்தட்டல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் ஒரு படைப்பாளிக்கு வரும் விமரிசனங்கள். என்னவோ எழுதுகிறான் பொழுது போகாமல், எதோ படித்துவிட்டு போவோம் அப்பால் என நினைக்காமல் சில நிமிடங்களை ஒதுக்கி எனக்கு நீங்கள் தரப்போகும் Horlicks தான் உங்களுடைய விமரிசனங்கள்.

ஏதேனும் நல்ல, சுவையான விஷயங்கள் எங்கேயிருந்தாலும் தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என் ஒரு எண்ணம், இந்த விஷயத்தில் நீங்களும் எனக்கு உதவலாம்.

பாரதி, நீயே துணை. ஜெய்ஹிந்த்!

முதல் தீப்பொறி!

ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு கேட்டும் வரும்போது அந்தந்த தொகுதி மக்கள் எல்லாம் சேர்ந்து, ஒரு தைரியமான ஆண்/பெண் பினால் நின்று, அந்த வேட்பாளரிடம், "சரி, உங்களுக்கு ஓட்டு போடுகிறோம், ஆனால் வெற்றி பெற்ற கையோடு, நீங்கள் இந்தந்த வசதிகளை இந்த தொகுதிக்கு செய்கிறேன் என்று இந்த ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திட்டு கொடுக்க முடியுமா?" என்று கேட்டு, கொடுத்தால் ஓட்டு, இல்லையென்றால் ஓடு என்று சொல்ல முடியுமா? சட்டப்படி இது சரியா? வல்லுனர்களே, உங்கள் கருத்து என்ன?